Breaking

Followers

Monday, 17 August 2026

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' - படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ!


'கருப்பு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம்தான் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், சுனில் ரெட்டி, நாசர் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யதேவரா நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

'வாரிசு' படத்தின் சாயலா?

இப்படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு, விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தைப் போன்று இது அமையும் என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் அவ்வாறே அமைந்திருந்தன. உண்மையிலேயே இப்படம் 'வாரிசு' திரைப்படத்தைப் போன்று உள்ளதா என்பதைப் பார்ப்போம்.

படத்தின் கதை (Story)

படத்தின் கதையைக் கவனித்தோமேயானால், 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெரிய பணக்கார வீட்டு இளைஞராக சூர்யா நடித்துள்ளார். அனைத்து வீடுகளிலும் நடப்பதைப் போலவே, அவரது வீட்டிலும் அவரது தாய் அவரைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்.

ஆனால், திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாத சூர்யா அமெரிக்காவிற்குச் செல்கிறார். அங்கிருந்து ஊருக்குத் திரும்பி வரும்பொழுது கையில் ஒரு குழந்தையுடன் வருகிறார். அக்குழந்தை யாருடையது என்று கேட்கும் பொழுது, அது தன்னுடைய குழந்தை என அவர் கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. எப்படி குழந்தை பெற்றுக்கொண்டார் என்றால், அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்று, அதை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனைக் கேட்ட வீட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. இதற்குப் பிறகு என்ன நடந்தது? மமிதா பைஜு எப்படிக் கதைக்குள் வருகிறார்? சூர்யா ஏன் திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட மறுக்கிறார்? என்பதைச் சொல்வதுதான் மீதிக்கதை.

நடிகர்களின் நடிப்பு (Performance)

இப்படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை; அவர் எப்போதும் போலத் தனக்கான கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். அவரது உணர்ச்சிகரமான காட்சிகளும், நகைச்சுவை உணர்வும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளன.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒரு உணர்ச்சிகரமான காட்சியில், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளார். அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாகவும், எதார்த்தமாகவும் அக்காட்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். திரையரங்கமே ஒரு நொடி ஆழ்ந்த அமைதிக்குச் சென்றது; பார்வையாளர்கள் அனைவரும் ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனார்கள். படத்தின் மொத்த பலமே சூர்யாதான்.

அடுத்து மமிதா பைஜு. 'பிரேமலு' படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், இப்படத்தில் மிகவும் சிறப்பாகவே தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். இவர் படத்தில் செய்யும் சின்னச் சின்ன சுட்டித்தனங்களும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது; சிரிக்கவும் வைக்கிறது. மிகையாக இல்லாமல், நேர்த்தியாகத் தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

அடுத்ததாக ராதிகா. சூர்யாவுக்கும் ராதிகாவுக்கும் இடையிலான அம்மா - மகன் பிணைப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 'தெறி' படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்திருப்பார்; அப்படத்தில் அவர்கள் இருவருக்கும் இடையிலான அம்மா - மகன் பிணைப்பு எப்படிச் சிறப்பாக அமைந்ததோ, அதேபோல இப்படத்திலும் நன்றாகவே அமைந்துள்ளது. ராதிகாவின் நடிப்பும் இப்படத்தின் முக்கியத் தூணாக அமைந்துள்ளது.

இயக்கம் மற்றும் திரைக்கதை (Direction & Screenplay)

அடுத்து இப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி. சற்றுத் தவறினால் கூட சுவாரஸ்யம் குறையக்கூடிய ஒரு கதையை வைத்துக்கொண்டு, தனது திறமையால் பார்வையாளர்களுக்குக் கொஞ்சமும் சலிப்புத் தட்டாதவாறு திரைக்கதையைத் தரமாக அமைத்துள்ளார். 'லக்கி பாஸ்கர்' படத்தில் நிறைய தர்க்கப் பிழைகள் (Logic Mistakes) இருந்தாலும், தனது திரைக்கதை கையாளும் திறமையால் ரசிகர்களுக்கு அது கொஞ்சமும் தெரியாதவாறு செய்திருப்பார். அதேபோலத்தான் இப்படத்திலும் இவருடைய திரைக்கதை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்ததாக, சூர்யாவுக்கும் மமிதா பைஜுவுக்கும் நடுவில் உள்ள வயது வித்தியாசம் மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும், இவர் கதையை நகர்த்திக் கொண்டு சென்ற விதம், ரசிகர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் யோசிப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. அந்த அளவிற்குச் சிறப்பாகத் திரைக்கதையைக் கையாண்டுள்ளார்.

பொதுவாக இவருடைய படங்களில் வசனங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். அதேபோல இப்படத்திலும் மிகச் சிறந்த வசனங்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக, ”நாம் இப்போது பெரிய ஆள் என்று ஆடும்போது, நமக்கும் மேலே ஒருவன் இருப்பான் என்பதைக் கடவுள் புரிய வைப்பார்” என்ற வசனத்திற்கெல்லாம் திரையரங்கில் பெருத்த வரவேற்பு கிடைத்தது.

படம் ஒரு திருப்புமுனையோடுதான் ஆரம்பிக்கும். அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை மிகுந்த எதிர்பார்ப்போடு கதையைக் கொண்டு செல்வார். மொத்தத்தில், படத்தின் முதல் பாதியே எவ்விதச் சலிப்புமின்றி மிகச் சிறப்பாக முடிந்துவிடும். ஆனால், இரண்டாவது பாதி சற்றுத் தொய்வாக இருக்கும். ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்குப் படம் இப்படித்தான் முடியப் போகிறது என்பது ஏற்கனவே தெரிந்துவிடும். இருந்தாலும், கதையைத் தொடர்பில்லாமல் சில காட்சிகளை வைத்து இழுத்தடித்திருப்பார்கள். அதைச் சற்றுத் தவிர்த்திருந்தால், படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

இசை (Music)

அடுத்து இப்படத்தின் இசை. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் கூட, இப்படத்திற்கு என்ன தேவையோ அதற்கேற்பப் பின்னணி இசையை அமைத்துள்ளார். குறைகூறும் அளவிற்கு இல்லாமல், ஓரளவுக்கு நேர்த்தியாக இசையைக் கையாண்டுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் & முடிவுரை (Box Office & Verdict)

படத்தின் இயக்குநர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்தவர் என்பதால், இப்படத்தில் தெலுங்குத் திரைப்படங்களின் சாயலும் லேசாகத் தெரியத்தான் செய்கிறது. தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிப் பார்வையாளர்களுக்கும் பொருந்தும் வகையிலேயே இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை எடுத்துள்ளார்.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 120 கோடி. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்களில் 140 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வருகிறது. IMDb தளத்தில் இப்படத்திற்கு 7.7 மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய வகையிலான ஒரு தரமான படத்தைக் கொடுத்துள்ளார் சூர்யா. கண்டிப்பாக இப்படம் குடும்பத்தோடு திரையரங்கில் சென்று பார்க்கக்கூடிய ஒரு தரமான படமாகும். வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்ப்பார்கள். 2000ஆம் காலகட்டத்தில் இருந்த சூர்யாவை மீண்டும் பார்த்தது போன்ற ஓர் உணர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment