Breaking

Followers

Friday, 21 August 2026

பாக்ஸ் ஆபிஸை மிரட்ட வரும் 'ஜெயிலர் 2' - எதிர்பார்ப்புகளும் முழு அலசலும்!


 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'. அந்த வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் அனிருத் இசையில் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகக் காத்திருக்கிறது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எகிறியுள்ள நிலையில், இதன் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றி ஃபார்முலா

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில், ஓய்வுபெற்ற ஜெயிலரான ரஜினிகாந்த், சிலை கடத்தும் வர்மனின் கும்பலிடம் மாட்டிக்கொண்ட தனது மகனை எப்படிக் காப்பாற்றினார் என்பதுதான் கதை. இதே பாணியில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், நெல்சன் திரைக்கதையைக் கையாண்ட விதம் தனித்துவமாக அமைந்திருந்தது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகளுக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நெல்சனின் தனித்துவமான டார்க் ஹியூமர் (Dark Humour) காட்சிகள் இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் (Cameo) நடித்திருந்தனர். இதன் காரணமாக கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் உள்ள ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அதேபோல, 'ஜெயிலர் 2' படத்திலும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'பீஸ்ட்' திரைப்படத்தின் சறுக்கலை அடுத்து நெல்சனின் சிறந்த கம்பேக் (Comeback) படமாக ஜெயிலர் அமைந்தது. இதனால் ஜெயிலர் 2 படத்திலும் தனக்கே உரித்தான பாணியில் திரைக்கதையை வடிவமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் எனப் பெரிதும் நம்பப்படுகிறது.

அனிருத்தின் அசுரத்தனமான இசை

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு மாபெரும் பங்காற்றியது அனிருத்தின் இசை என்றால் அது மிகையாகாது. அனிருத்தின் இசையைக் கொண்டாடுவதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்தது. இப்படத்தில் இடம்பெற்ற 'அலப்பறை கிளப்போம்' பின்னணி இசை (BGM) பட்டிதொட்டியெங்கும் செம ஹிட் அடித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்லோ மோஷன் காட்சிகளுக்கு இந்த பிஜிஎம் பெரும் பலம் சேர்த்தது. மேலும், நடிகை தமன்னா நடனமாடிய 'காவாலா' பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

எனவே ஜெயிலர் 2 படத்திற்கும் அனிருத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. முதல் பாகத்தில் 'காவாலா' பாடல் இருந்ததைப் போலவே, இந்த ஜெயிலர் 2 படத்திலும் 'Ala bolelo' என்று ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். நடிகை பூர்ணா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடியுள்ள இப்பாடல், தற்போது பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெயிலர் 2: கதையின் எதிர்பார்ப்பு என்ன?

ஜெயிலர் 2 திரைப்படம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் வில்லனான வர்மன் சாகும்போது ரஜினிகாந்தைப் பார்த்து, “ஏய் ஜெயிலர், என்னைக் கொன்னுட்டா இது இதோட நிக்கப் போறது இல்ல... இது பெரிய நெட்வொர்க்” என்று கூறுவார். இதிலிருந்து, வர்மனின் இறப்புக்குப் பிறகு அவனது ஆட்கள் ரஜினியைப் பழிவாங்க வருவது போலக் கதைக்களம் அமையலாம் என்று சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் 'இரண்டாம் பாக' சாபத்தை உடைக்குமா?

தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று, அதன் இரண்டாம் பாகம் வெளியாகி முதல் பாகத்தின் பெயரையும் கெடுப்பது போன்ற ஒரு தொடர்கதை நிலவி வருகிறது. சாமி 2, பில்லா 2, சண்டக்கோழி 2, மற்றும் சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியதோடு, அதன் முதல் பாகத்திற்கு இருந்த நல்ல மதிப்பையும் குறைத்தன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாகப் பெரிதும் எடுபடவில்லை. சூர்யா நடித்த 'சிங்கம் 2' மட்டுமே இதற்கு விதிவிலக்காக அமைந்தது. இதனால், ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெளியாகவுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், வெற்றி பெறுமா அல்லது இரண்டாம் பாகச் சாபத்தில் சிக்குமா என ரஜினி ரசிகர்கள் சற்று கவலையுடன் காத்திருக்கின்றனர்.

1000 கோடி வசூல் சாதனை நிகழுமா?

தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி வசூல் என்ற மைல்கல்லை எந்தப் படமும் தொடவில்லை. லியோ மற்றும் கூலி ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவிற்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும் என எதிர்பார்த்த வேளையில், கலவையான விமர்சனங்களைப் பெற்ற காரணத்தினால் அந்தச் சாதனையை அடையத் தவறின. அதற்குப் பிறகு விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில், படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகிப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக, 'ஜெயிலர் 2' திரைப்படம் உறுதியாக 1000 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என ரஜினி ரசிகர்கள் முழு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

முடிவுரை

எது எப்படி இருந்தாலும், எப்போதும் போல இப்படத்தின் முழுப் பலமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்தான். 70 வயதைக் கடந்தும் அவரது மார்க்கெட் இன்னும் கொடிகட்டிப் பறக்கிறது. ஜெயிலர் 2 படத்தில் அவரது ஸ்டைலான நடிப்பைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தலைவர் மற்றும் நெல்சன் ரசிகர்களுக்குச் சிறந்ததொரு விருந்து காத்துக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல இப்படத்தைத் தனது இசையின் மூலம் அனிருத் கண்டிப்பாகத் தாங்கிப் பிடிப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

No comments:

Post a Comment