படக்குழு:
இயக்கம்: ஆகாஷ் பாஸ்கரன்
தயாரிப்பு: Dawn பிக்சர்ஸ்
நடிப்பு: அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயட லோகர், நட்டி நடராஜ், சுதாகர், டிராவிட்
சிறப்புத் தோற்றம்: பகத் பாசில்
இசை: தமன்
OTT தளம்: Netflix
IMDb ரேட்டிங்: 8.1/10
கதைக்களம்:
பள்ளிப் பருவத்தில் தன்னுடைய சக மாணவியான ப்ரீத்தி முகுந்தனை ஒன் சைடாக காதலிக்கிறார் இந்தப் படத்தின் ஹீரோ அதர்வா. எப்படியாவது அந்தப் பெண்கிட்ட காதலைச் சொல்லிடணும்னு ரொம்ப நாளா அவர் பின்னாடியே சுத்துறாரு. அந்தப் பொண்ணு டியூஷன் போற இடத்துக்கும், டென்னிஸ் விளையாடுற கிரவுண்டுக்கும் தொடர்ந்து செல்வார். இப்படி ஹீரோயின் போற இடத்துக்கெல்லாம் போயி எவ்வளவு ட்ரை பண்ணியும் அவரால காதலைச் சொல்லவே முடியல. ஒருநாள் ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தன் நேரா வந்து அவங்களோட பிறந்தநாள் பார்ட்டிக்கு வரச் சொல்லி இன்வைட் பண்றாங்க.
அங்கே போகும் ஹீரோவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கு. ப்ரீத்திக்கு ஒரு இரட்டைச் சகோதரி இருப்பதை அங்குதான் அறிகிறார். இதில் ஒருத்தங்க ஈவினிங் கிளாஸ்க்கும், இன்னொருத்தங்க டென்னிஸ் விளையாடவும் போயிருப்பாங்க. ஆனால், இது தெரியாத நம்ம ஹீரோ, இத்தனை நாளா அக்கா தங்கச்சி இரண்டு பேர்ல யாரை லவ் பண்றோம்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நிப்பாரு. இதனால் மனமுடைந்து தன் காதலைச் சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
நாட்கள் நகர்கிறது. 2011 கிரிக்கெட் வேர்ல்ட் கப் ஃபைனல் மேட்சை, ஹீரோவோட மாமா நட்டி நடராஜ் வீட்டு மொட்டை மாடியில் பெரிய ஸ்க்ரீன்ல போடுறாங்க. அப்போது அங்கு நடக்கும் சின்ன சண்டையில் ஹீரோவோட கண்ணில் அடிபட்டு ஹாஸ்பிடல் போறாரு. அங்கதான் அமுதாவை (கயட லோகர்) மீட் பண்றாரு. காலேஜில் டிகிரி படித்துவிட்டு டாக்டராக வேலை பார்க்கும் அமுதாவுடன் ஏற்படும் பழக்கம் மெல்ல மெல்ல ஒன் சைடு காதலாக மாறுகிறது. முன்னாடி பண்ண தப்பை திரும்பவும் பண்ணக் கூடாது, எப்படியாவது காதலைச் சொல்லிடணும் என நினைத்து, ஊருக்குக் கிளம்பும் அமுதாவிடம் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து காதலைச் சொல்ல முயல்கிறார். ஆனால், வார்த்தைகள் வராமல் தடுமாறுகிறார். ஏதோ அவரைத் தடுப்பது போல ஃபீல் ஆக, ரயில் கிளம்பிவிடுகிறது. முதல் முறை செய்த தப்பை மீண்டும் செய்கிறார் ஹீரோ. இதன் பிறகு அதர்வா தன் காதலை அமுதாவிடம் சொன்னாரா? இல்லை பள்ளிப்பருவ காதலி ப்ரீத்தியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா:
கதை பழைய பாணியில் இருந்தாலும், 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் ஈர்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டையோட பழத்தைச் சாப்பிட்டால் வயிற்றில் மரம் முளைக்கும், கிஸ் பண்ணா குழந்தை பிறக்கும், ரெட்டை சுழி உள்ளவனுக்கு இரண்டு கல்யாணம் நடக்கும் போன்ற 90ஸ் கிட்ஸ்களின் வேடிக்கையான நம்பிக்கைகளைத் திரையில் பார்க்கும்போது, நேராக பழைய காலத்துக்கே சென்று வந்த ஃபீல் கிடைக்கிறது. ஒரு பெண்ணை ஒன் சைடாக லவ் பண்ணும்போது கிடைக்கும் அந்த உணர்வு இன்றைய 2K கிட்ஸ்களை விட 90ஸ் கிட்ஸ்களுக்கு மிக நெருக்கமாகக் கடத்தப்பட்டுள்ளது.
நடிப்பும் கேமியோவும்:
படத்தின் 'இதயா' கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் அதர்வா. 'பூவே உனக்காக' படத்திற்குப் பிறகு வந்த சிறந்த ஒன் சைடு லவ் படமாக இது அமைய அதர்வாவின் சிறப்பான நடிப்பே முக்கியக் காரணம். யூடியூப் மூலம் பிரபலமான சுதாகர் மற்றும் டிராவிட் இருவருக்கும் இது மிகச்சிறந்த வாய்ப்பு. மெர்சலுக்குப் பிறகு சுதாகருக்கு இது நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ். அதேபோல் 'டியூட்' படத்தில் கலக்கிய டிராவிட் இதிலும் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தில் செமையாக பெர்ஃபார்ம் செய்துள்ளார். மேலும், கேரள நடிகரான பகத் பாசில் ஒரு சின்ன கேமியோ ரோல் பண்ணிட்டுப் போயிருக்காரு. அதுவும் படத்திற்கு கூடுதல் பலம்.
இசை மற்றும் திரைக்கதை:
தமனின் இசையில் "இதயா இதயா" பாடல் ஓரளவுக்கு ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையும் பெரிதாக இல்லாவிட்டாலும், படத்திற்கு ஏற்றவாறு டீசண்டாக அமைந்திருக்கிறது. படத்தின் மிகப்பெரிய மைனஸ் அதன் நீளம்தான். படம் மொத்தமாக 2 மணி 40 நிமிடங்களுக்கு மேலாக ஓடுகிறது. முதல் பாதி எந்த ஒரு சலிப்பும் இல்லாமல் சுவாரஸ்யமாகச் சென்றாலும், இரண்டாம் பாதியில் ஒரு சில சீன்ஸ் லேக் ஆகுற மாதிரி ஃபீல் ஆகுது. தேவையற்ற காட்சிகளைக் கத்தரித்து 2 மணி 10 நிமிடங்களாகக் குறைத்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும்.
முடிவுரை:
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு சூப்பரான ஃபீல் குட் மூவி. தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். நீங்க 90ஸ் கிட்ஸா இருந்தா இந்தப் படம் உங்க மனசுக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும்!


No comments:
Post a Comment