சூர்யா மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவாகி, இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் சீன். லகரம் ஸ்டுடியோஸ் அண்ட் என்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் சூர்யா - ஜோதிகா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இதில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா, ஆனந்த்ராஜ், ஜோன் விஜய், மலையாள நடிகர் நஸ்லின் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன் ஆகியோர் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை மலையாள இயக்குனரான ஜித்து மாதவன் இயக்குகிறார். இவரோட முந்தைய படங்களான பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த ஆவேசம் மற்றும் ரோமன்சம் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூலிலும் சக்கை போடு போட்டது.
SCENE டீசர் அலசல்
எனவே சூர்யா நடிக்கும் இந்த சீன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைத்தளங்களில் இதன் கதை என்னவாக இருக்கும் என பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கின்றது. அப்படி இந்த டீசரில் என்ன முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை பற்றி ஒரு சிறிய அலசலை அலசுவோம்.
இந்த டீசரை பார்க்கும்போது சூர்யா ஒரு சைக்கோ தனமான போலீஸ் கேரக்டராக நடித்திருப்பதை பார்க்கக் கூடியதாக உள்ளது. இவருக்கான எலிவேஷன் காட்சிகளும் வசனங்களும் அவ்வாறே அமைந்துள்ளது. டீசர் ஆரம்பமாகும் போது “அந்த ஆளோட டேலண்ட் டேலண்ட் அப்படின்னு அந்த ஆளோட கேவலமான கேரக்டரை மறைச்சிடுங்க” அப்படின்னு சூர்யாவை குறிப்பிட்டு சொல்ற மாதிரி இருக்கு.
அதுக்கு அடுத்த சீன்ல சூர்யா ராஜ் பிரியன் கிட்ட “யாரு யார கொன்னா?” அப்படின்னு கேக்குறாரு, அதுக்கு ராஜ் பிரியன் “அதை கண்டுபிடிக்க தான் சார் நீங்க வந்து இருக்கீங்க” அப்படின்னு சொல்றாரு. இதுல இருந்து இந்த படம் வழக்கமான போலீஸ் படங்களை மாதிரியே ஏதாவது ஒரு கொலை கேஸ் பத்தி தேடி கண்டுபிடிக்கிற மாதிரி இருக்குமோன்னு தோணுது. அதுக்கு அப்புறம் சூர்யாவோட மாஸ் டயலாக் எல்லாம் செம்மையா இருந்துச்சு. அதுலயும் குறிப்பா, “நான் வேணா உன்னை அரஸ்ட் பண்ண முதல் போலீஸ் அதிகாரியா இருக்கலாம், ஆனா நீ நான் அரஸ்ட் பண்ண 900 அக்யூஸ்டுகள்ல நீ ஒரு சில்லறை” அப்படின்னு சொல்ற வசனம் செம்மையா இருந்தது.
அப்புறம் இந்த படத்துல சூர்யாவோட பேரு இன்பராஜ். இந்த டீசர்ல “இன்பராஜ் சார பார்த்தா அக்யூஸ்ட் எல்லாம் ஒரு மாதிரி பிகேவ் பண்றாங்க” அப்படின்ற ஒரு வசனமும் இடம் பெறுகிறது. இதெல்லாம் பாக்குற நேரம், இந்த படத்துல ஏதோ ஒரு பெரிய சம்பவம் பண்ணி இருக்காங்க போல தெரியுது.
தொடர் வெற்றிகளும் சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராஜ்யமும்
தொடர்ந்து நல்லா படம் பண்ணிட்டு வந்த சூர்யா திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல சிங்கம் 2 படத்துக்கு அப்புறமா வந்த எந்த படமும் பெருசா ரசிகர்கள் மத்தியில் எடுபடல. சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல ஒரு வரவேற்பை பெற்றாலும், இந்த இரு திரைப்படங்களும் தியேட்டரில் வெளியாகவில்லை; இரண்டுமே ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள். அதன் பின் தியேட்டரில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய பட்சத்தில், ஆர் ஜே பாலாஜி மூலம் 'கருப்பு' எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்து சூர்யா தமிழ் சினிமாவுக்கு தரமான கம் பேக் ஒன்றினை கொடுத்தார்.
கருப்பு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி 300 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்தது. அதன்பின் தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் 260 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்து பெரிய வெற்றியை பெற்றது.
அடுத்து இந்த வருட தீபாவளிக்கு சீன் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருநூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால், ஒரே வருடத்தில் மூன்று 200+ கோடிகள் வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக சூர்யா மாறுவார். ஒருவேளை அப்படி நடந்தால் அடுத்த ஐந்து பத்து வருடங்களுக்கு சூர்யா தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை. அதாவது விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார், அஜித் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் வீதம் நடிப்பதாக முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித் கையில் கிளாடியேட்டர் மற்றும் டேர் டெவில் ஆகிய திரைப்படங்கள் கைவசம் உள்ளது, இருந்தாலும் அந்த திரைப்படங்கள் இப்பொழுது வெளியாகுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் தமிழ் சினிமாவின் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறுவதற்கான வாய்ப்பு சூர்யாவிற்கு பிரகாசமாக உள்ளது. முன்பே கூறியது போல் சீன் திரைப்படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால் இதுவரை எந்த நடிகரும் செய்யாத புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகுவார் சூர்யா.
சூர்யாவின் ரசிகர்களும் இதனையே விரும்புகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், மூன்று வருடங்களுக்கு ஒரு படம் வீதம் பண்ணாமல் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொடர்ச்சியாக வெளிவரும் சூர்யாவின் திரைப்படங்களால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
தீபாவளி ரேஸ்: 'சீன்' படத்திற்கு காத்திருக்கும் சவால்
அடுத்து இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதனால், நாம் முன்பு கூறியது போல் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஏனென்றால் இந்த வருட தீபாவளிக்கு ரன்வீர் கபூர் மற்றும் யாஷ் நடித்து வெளியாக உள்ள 'ராமாயணம்' மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் 'மூக்குத்தி அம்மன் பாகம் 2' ஆகிய திரைப்படங்களும் வெளியாக காத்திருக்கின்றன.
இந்த திரைப்படங்கள் சூர்யாவின் சீன் திரைப்படத்திற்கு கடும் போட்டி மற்றும் நெருக்கடியை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். படம் சோலோ ரிலீஸ் என்றால் எப்படியாவது பாக்ஸ் ஆபிஸில் கலக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இரண்டு மூன்று திரைப்படங்களுடன் போட்டிக்கு ரிலீஸ் ஆக இருப்பதினால் இந்த படத்தின் கதை நன்றாக இருக்க வேண்டும். கதை மற்றும் திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் திரையரங்கை நோக்கி படையெடுப்பார்கள், இல்லை என்றால் இந்த படத்தினை skip செய்து மற்ற படங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பார்ப்போம் ஜித்து என்ன செய்து வைத்திருக்கின்றார் என்று.
அக்டோபர் ரிலீஸ்: மாமனாருக்கு எதிராக களமிறங்கும் மருமகன்
இந்தப் படங்களுக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தனுஷ், மம்முட்டி நடித்த ஓம் திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது தனுஷ் தனது படத்தை தள்ளிப் போடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு எதிராக ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டிக்கொண்டு வருகின்றார். இதனால் மாமனாருக்கு எதிராக களமிறங்கும் மருமகன் என நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை நக்கலாக தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற சினிமா செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஆர்கே மூவி டாக்கிஸ் தளத்தை ஃபாலோ செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக