
ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் 'ராம் & லீலா'. ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ ராஜ் மற்றும் வருத்திகா ஜெயின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தைப் பற்றிய முழு அலசலைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இப்படத்தில் ரியோ ராஜுடன் இணைந்து மாகாபா ஆனந்த், முனிஸ்காந்த் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் (Trident Arts) மற்றும் ஈவா என்டர்டெயின்மென்ட்ஸ் (EYWA Entertainments) இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம்
படத்தின் நாயகன் ராமிற்கு 30 வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. நிறைய பெண்களைப் பார்த்தும், அவர்கள் அனைவரும் இவரை ரிஜெக்ட் செய்து விடுகிறார்கள். ராமின் வீட்டில் அப்பா, அம்மா, தங்கை என மொத்தம் நான்கு பேர். ராமும் அவரது அப்பாவும் முகம்கொடுத்துக் கூடப் பேசிக்கொள்ள மாட்டார்கள்; அம்மா தான் இருவருக்கும் நடுநிலையாக இருப்பார். மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்ற கவலை பெற்றோருக்கு இருக்க, எப்படியாவது ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்ய வேண்டும் என ராம் முயற்சி செய்கிறார்.
ஒருநாள் தெருவோர டீக்கடையில் நின்று பெண்களை சைட் அடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வரும் ஒருவர், "இங்கெல்லாம் பெண்கள் வருவது குறைவு, லோக்கல் ட்ரெயின் பக்கம் போய்ப் பார், நிறைய பெண்கள் வருவார்கள்" என்று ஐடியா கொடுக்கிறார். அதைக் கேட்டு ட்ரெயின் பக்கம் செல்லும் ராம், அங்குதான் முதன்முதலாக நாயகி லீலாவைப் பார்க்கிறார். லீலாவின் அழகில் மயங்கும் ராம், அந்த ஐடியா கொடுத்த நபருடனேயே நண்பராகி விடுகிறார் (அந்த நண்பரின் பெயரும் ராம் தான்).
ஒருவழியாக லீலாவிடம் பேசி, இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காதலிக்கத் தொடங்கும்போதே லீலா ஒரு கண்டிஷன் போடுகிறார். "மாலை 6 மணிக்கு மேல் நான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன், அம்மா அப்பா திட்டுவார்கள்" என்று சொல்ல, ராமும் அதற்குச் சம்மதிக்கிறார். லீலா தனது வீட்டிற்கும் ராமை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
நாட்கள் நகர, லீலாவின் பிறந்தநாள் வருகிறது. அவருக்குச் சர்ப்ரைஸ் கொடுக்க மாலை 6 மணிக்கு மேல் வெளியே கூப்பிடுகிறார் ராம். ஆனால், லீலா வர மறுத்துவிடுகிறார். இதனால் ராமுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. '6 மணிக்கு மேல் லீலா எங்கு செல்கிறாள்? என்ன செய்கிறாள்?' என ராமுக்கு ஒரே யோசனை. இதைக் கேள்விப்படும் நண்பர் ராம், ஹீரோவை அழைத்துக்கொண்டு லீலாவின் வீட்டிற்கே சர்ப்ரைஸ் கேக் வெட்டச் செல்கிறார். அங்கு சென்றும் லீலா போனை எடுக்காததால் ஆத்திரமடையும் நண்பர் ராம், லீலாவைத் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் கடுப்பான ஹீரோ ராம், தனது நண்பனையே அறைய, நண்பரும் கோபத்தில் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.
விடிய விடிய லீலா வீட்டு வாசலிலேயே காத்திருக்கும் ஹீரோவை, காலையில் வெளியே வரும் லீலாவின் அம்மா பார்த்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு லீலாவிடம், "மற்ற காதலர்களைப் போல 6 மணிக்கு மேல் வெளியே சுத்த எனக்கும் ஆசையாக உள்ளது. நீ 6 மணிக்கு மேல் என்ன செய்கிறாய் என எனக்குத் தெரிந்தே ஆக வேண்டும்" என்று சண்டை போடுகிறார் ராம். வேறு வழியின்றி லீலாவும் அவர் குடும்பத்தினரும், தாங்கள் 'ஏலியன் (Alien) குடும்பம்' என்ற உண்மையை உடைக்கிறார்கள். இதைக் கேட்ட ராமுக்குத் தலைசுற்றிப் போகிறது.
அங்கிருந்து தப்பியோட நினைத்தாலும் முடியாமல், 'ஏலியனாக இருந்தால் என்ன, நீயும் பெண்தானே' என ஒருவழியாகச் சமாதானம் அடைகிறார். அப்போதுதான் கதையின் மிகப்பெரிய ட்விஸ்ட் உடைகிறது. "6 மணிக்கு மேல் லீலா ஒரு ஆணாக மாறிவிடுவாள். அந்த ஆண் வேறு யாருமல்ல, இவ்வளவு நாளாக உன்னுடன் சுற்றிக்கொண்டிருந்த நண்பன் ராம் தான்!" என்ற உண்மையைச் சொல்ல, ஹீரோ ராம் மீண்டும் தலைசுற்றிக் கீழே விழுகிறார்.
இதற்குப் பிறகு என்ன நடந்தது? ராமும் லீலாவும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? என்பதை நகைச்சுவையோடு சொல்வதுதான் மீதிக்கதை.
படத்தின் ப்ளஸ் (Positives)
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் கதைதான். ஏலியன் ஹீரோயின், பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் மாறும் கான்செப்ட் என வித்தியாசமான கதையை யோசித்து, தமிழ் சினிமாவிற்குப் புது அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன். இவரின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
படத்தின் திரைக்கதை (Screenplay) எங்கும் சலிப்புத் தட்டாமல் நம்மளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது. ஹீரோயின் 6 மணிக்கு மேல் என்ன செய்கிறார் என்ற ட்விஸ்ட் உடையும் காட்சியும், நண்பன் ராம் தான் லீலா என்று சொல்லும் காட்சியும் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
படத்தில் வரும் காமெடி காட்சிகள் அனைத்தும் தரமாக உள்ளன. குறிப்பாக, மாகாபா ஆனந்த் மற்றும் முனிஸ்காந்த் ஆகியோரின் காமெடி போர்ஷன் செமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. கதையின்படி மாகாபா ஆனந்தும் ஒரு ஏலியன் தான்; அவர் பகலில் ஆணாகவும், இரவில் பெண்ணாகவும் மாறிவிடுவார். இப்படிப் பெண்ணாக மாறும் மாகாபாவின் பின்னால் முனிஸ்காந்த் சுற்றும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன.
நடிகர்களின் நடிப்பு
ரியோ ராஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மாஸ் செய்துள்ளார். முந்தைய படங்களில் ரசித்த ரியோவை திரும்பவும் பார்த்த மாதிரி ஒரு ஃபீல் கிடைத்தது. முக்கால்வாசி படம் ரியோவைச் சுற்றியே நகர்கிறது. இவருடைய காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ஆடியன்ஸோடு பக்காவாகக் கனெக்ட் ஆகிறது. மொத்தத்தில் 'ராம்' ஆக மக்களின் மனதில் ஸ்கோர் செய்துவிட்டார் ரியோ. சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தபடியாக தற்போதைய ஜென்-சி (Gen-Z) ரசிகர்களைக் கவர்ந்து இவர் இன்னும் பெரிய உயரத்திற்குச் செல்வார் என எதிர்பார்க்கலாம்.
புதுமுக நாயகி வருத்திகா ஜெயின், குறைசொல்ல முடியாத அளவிற்குத் தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாகச் செய்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு பல இளைஞர்களின் 'Crush' ஆக இவர் மாற நிறைய வாய்ப்புள்ளது.
படத்தின் மைனஸ் (Negatives)
முதலாவது மைனஸ் படத்தின் இசை. அங்கிட் மேனன் (மலையாளப் படங்களுக்கு இசையமைத்தவர்) இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். காமெடி காட்சிகளுக்கு வரும் பின்னணி இசையைத் (BGM) தவிர்த்து, மற்ற இடங்களில் இசையோ பாடல்களோ பெருசாகக் கனெக்ட் ஆகவில்லை. புதுமுக இசையமைப்பாளர் என்பதால் கொஞ்சம் தடுமாறியிருக்கலாம்; இனி வரும் படங்களில் சிறப்பாகச் செய்வார் என நம்பலாம்.
அடுத்ததாகப் படத்தின் நீளம் (Duration). மொத்தம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் படம் ஓடுகிறது. இந்த ஒரு கான்செப்ட்டை வைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் கொண்டு செல்வது சில இடங்களில் லேக் (Lag) ஆவது போல் ஃபீல் ஆகிறது. இரண்டு மணி நேரத்திற்குள் படத்தை முடித்திருந்தால் திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
இறுதி தீர்ப்பு
படத்தின் நீளம் மற்றும் இசையைத் தாண்டிப் பெருசாகக் குறைசொல்ல ஒன்றுமில்லை. புது கான்செப்ட்டுடன் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் இந்த 'ராம் & லீலா', குடும்பத்தோடு சேர்ந்து பார்த்துச் சிரிக்க வேண்டிய ஒரு தரமான ரொமாண்டிக் காமெடிப் படம்.
பாக்ஸ் ஆபிஸ் மற்றும் ரேட்டிங்:
IMDb ரேட்டிங்: 6.5/10
வசூல்: முதல் நாளில் 20 லட்சமும், அடுத்து வந்த நான்கு நாட்களில் 1.2 கோடிகளும் வசூல் செய்து சுமாரான பாக்ஸ் ஆபிஸ் சாதனையைப் படைத்துள்ளது (படத்தின் பட்ஜெட் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை).
OTT ரிலீஸ்: படம் ஓடிடியில் (OTT) வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
குறிப்பு: இது போன்ற சினிமா விமர்சனங்களை உடனுக்குடன் அறிய ஆர்கே மூவி டாக்கிஸ் (RK Movie Talkies) தளத்தைத் தொடர்ந்து ஃபாலோ செய்யவும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக