Breaking

Followers

திங்கள், 21 செப்டம்பர், 2026

மண்டாடி - திரைப்பட விமர்சனம்: முன்னணி நாயகனாக முத்திரைப் பதித்தாரா சூரி?


 ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி அவர்கள், இன்று முன்னணி நடிகர்களுக்கே சவால் கொடுக்கும் நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். 'விடுதலை' படத்தில் நாயகனாக அறிமுகமாகி 'கருடன்', 'கொட்டுக்காளி', 'விடுதலை பாகம் 2', 'மாமன்' ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த அனைத்துப் படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அந்த வரிசையில், செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் 'மண்டாடி'. இந்தப் படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறதா? சூரி தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வருவதற்கு இந்தப் படம் அடித்தளம் அமைத்துள்ளதா என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

எல்ரெட் குமார் (Elred Kumar) தயாரிப்பில், மதிமாறன் இயக்கத்தில், சூரி 'முத்துக்காளி'யாக மிரட்டியிருக்கும் திரைப்படம்தான் மண்டாடி. இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், சுகாஸ், மகிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு

  • சூரி - முத்துக்காளி

  • சுகாஸ் - சாட்டா புலி

  • மகிமா நம்பியார் - ஏஞ்சல் ராக்கம்மா

  • மிதுன் ஜெய்சங்கர் - மாரி

  • க்ரிஷ் ஹாசன் - கிட்டான்

படத்தின் கதைச்சுருக்கம்

பாய்மரப் படகுப் போட்டியில் கிட்டான் மாரியைச் சேர்க்க மாட்டார். இதனால், ரொம்ப நாளாகப் போட்டியிடாமல் முடங்கிக் கிடந்த 'முகவை மைந்தன்' என்ற அணியை மாரி திரும்பவும் ஆரம்பிக்கிறார். இதன் காரணமாக மாரிக்கும் கிட்டானுக்கும் பல காலமாகப் பகை முற்றிப் போய்க் கிடக்கிறது. ஒரு நாள் கிட்டானைக் கொல்வதற்கு மாரி முயற்சி செய்ய, அவனிடமிருந்து கிட்டானை அவனது அப்பா சாட்டா புலி காப்பாற்றுகிறார். அதன்பிறகு, தன் மகனைக் கொல்ல வந்த மாரியைக் கொல்வதற்காக ஊருக்குள் ஆட்களை அனுப்பித் தேடுகிறார். மாரியின் அப்பா சிங்காரம், தன் மகனை எப்படியாவது காப்பாற்றுவதற்காக அவனை அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னையில் சூரி ஒரு நீர்ப்பூங்காவில் வேலை பார்க்கிறார். சூரியின் உறவுக்காரப் பெண்தான் மாரியைச் சூரியிடம் அனுப்பி வைத்துவிட்டு, தொலைபேசியில் என்ன நடந்தது என்று விவரமாகச் சொல்கிறார்கள். சூரியும் மாரியைக் கூட்டிக்கொண்டு போய் தன்னுடைய அறையில் தங்க வைக்கிறார். மாரி சென்னையில் யாரோடு இருக்கிறார் என்று தேடும் சாட்டா புலிக்கு, அவன் முத்துக்காளியோடு இருக்கும் விஷயம் தெரிய வருகிறது.

இந்த இடத்தில்தான் முத்துக்காளி யார் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. முத்துக்காளியான சூரி, 20 வருடங்களுக்கு முன்னால் 'முகவை மைந்தன்' அணியில் 'மண்டாடி'யாக இருந்தவர். அவரும் சாட்டா புலியும் ஒரு காலத்தில் அந்த அணிக்காக ஒன்றாக விளையாடிய உயிர் நண்பர்கள். சில காரணங்களுக்காகச் சூரி முகவை பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதற்குப் பிறகு, மாரியைக் கொல்ல சாட்டா புலி ஆட்களை அனுப்ப, சூரி அவர்களை அடித்து விரட்டி மாரியைக் காப்பாற்றுகிறார். 20 வருடங்களாகத் தன் சொந்த ஊருக்குப் போகாமல் இருந்த காளி, மாரிக்காக மீண்டும் முகவை பட்டினத்திற்குத் திரும்புகிறார். செல்லும் வழியிலும் சாட்டா புலியின் ஆட்களிடமிருந்து மாரியைக் காப்பாற்றி, நேராகத் தர்காவுக்குக் கூட்டிச் செல்கிறார். அங்கு ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. திருவிழா வரப்போவதாகவும், அதோடு சேர்த்துப் பிரம்மாண்டமான பாய்மரப் படகுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டிருப்பதால், வெட்டு குத்து அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று பெரியவர்கள் தீர்ப்பளிக்கிறார்கள்.

அப்போது சாட்டா புலி, முத்துக்காளியிடம் "இந்தப் படகுப் போட்டியில் நீங்கள் தோற்றுவிட்டால், அணியைக் கலைத்துவிட்டுப் போய்விட வேண்டும்" என்று பந்தயம் கட்டுகிறார்.

பந்தயத்தில் முத்துக்காளியின் அணி ஜெயித்ததா? உயிர் நண்பர்களாக இருந்த முத்துக்காளியும் சாட்டா புலியும் எப்படிப் பகையாளிகள் ஆனார்கள்? இதற்கு நடுவில் சத்யராஜ், மகிமா நம்பியார் ஆகியோர் எப்படி கதைக்குள் வருகிறார்கள்? என்பதைச் சொல்வதுதான் படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

படத்தின் ப்ளஸ் (Positives)

கதையும் திரைக்கதையும்: அருமையான கதை, சலிப்பில்லாமல் முன்னோக்கி நகர்த்தும் திரைக்கதை என ஒரு கமர்சியல் படத்திற்கு என்ன தேவையோ, அவை அனைத்தும் இந்தப் படத்தில் குவிந்துள்ளன. பண்டைய காலத்துப் பாய்மரப் படகுப் போட்டியை இந்தக் காலத் தலைமுறையினருக்குக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன். காதல், நட்பு, துரோகம் மற்றும் பாரம்பரிய வீர விளையாட்டுகள் பற்றிப் பேசும் இத்திரைக்கதை, எங்கும் தொய்வடையாமல் ரசிகர்களைப் படத்தோடு கட்டிப்போட்டு விடுகிறது.

நடிகர்களின் மிரட்டலான நடிப்பு: சூரியின் இந்த உருமாற்றம் (Transformation) அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'முத்துக்காளி'யாகத் தன்னைத்தானே இந்தப் படத்திற்கு அர்ப்பணித்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் ஒரு எமோஷனலான காட்சியில், சூரி அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

வில்லனாக நடித்துள்ள சுகாஸிற்கு, லவ்வர் பாய் மற்றும் துணை கதாபாத்திரங்களில் வலம் வந்த நிலையில், இந்தப் படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. மகிமா நம்பியார் மற்றும் மிதுன் ஜெய்சங்கர் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். சத்யராஜ் 'மச்சமுனி பிதாமகனாக' மிரட்டி, படத்திற்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளார்.

மேக்கிங் மற்றும் இசை: பாலா சரவணனின் காமெடி காட்சிகள் திரையரங்கில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன. படகுப் போட்டிக் காட்சிகள் முழுவதுமாக ரியல் லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளதால், விஷுவல் ட்ரீட் கொட்டிக் கிடக்கின்றது. கிளைமேக்ஸ் காட்சியில் வரும் மேக்கிங் வேலைப்பாடுகள் ஹாலிவுட் தரத்தில் உள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசைதான் படத்தினை இன்னும் வலுவாகத் தாங்கிப் பிடிக்கின்றது.

படத்தின் மைனஸ் (Negatives)

இப்படத்தின் ஒரே ஒரு குறை இதன் நீளம்தான் (Duration). படம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் வரை ஓடுகின்றது. இதைச் சற்றுக் குறைத்து, 2 மணி 15 நிமிடங்களுக்குள் சுருக்கியிருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இருந்தாலும், மதிமாறனின் திரைக்கதை கையாளும் திறமையால் இது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை.

பட்ஜெட் மற்றும் வசூல் சாதனை

சுமார் 70 கோடிகளுக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சூரியின் சம்பளம் மட்டுமே 20 கோடிகள் எனக் கூறப்படுகின்றது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம், இரண்டு வாரங்களில் 103 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 100 கோடி வசூல் செய்த நாயகர்களின் பட்டியலில் சூரி தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்த படத்திற்கு IMDb 9.2 ரேட்டிங் கொடுத்துள்ளது. கண்டிப்பாக, குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்துக் கொண்டாட வேண்டிய தரமான படம்தான் இந்த 'மண்டாடி'.

இது போன்ற திரைப்படங்களின் விமர்சனங்கள் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள RK Movie Talkies-ஐ ஃபாலோ செய்யுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக